நெல் விற்பனை செய்த ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரி கைது
திருவண்ணாமலையில் நெல் விற்பனை செய்த ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகில் உள்ள பெரிய கிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திராவிடமணி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 21). திராவிடமணிக்கும், தண்டராம்பட்டு தாலுகா மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த வியாபாரி சண்முகம் (44) என்பவருக்கும் நெல் வியாபாரம் தொடர்பாக பழக்கம் இருந்து வந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் திராவிடமணி தனது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய சண்முகத்தை தொடர்பு கொண்டார். இதையடுத்து 2,100 நெல் மூட்டையை ரூ.21 லட்சத்து 59 ஆயிரத்து 640-க்கு சண்முகம் ஏஜெண்டு மூலம் விற்பனை செய்து உள்ளார்.
இந்த பணத்தை சண்முகம் திராவிடமணியிடம் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். பின்னர் திராவிடமணி ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சண்முகம் திராவிடமணிக்கு ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 640 வழங்கி உள்ளார். மீதமுள்ள பணத்தை சண்முகம் கொடுக்காமல் மீண்டும் காலதாமதம் செய்து வந்தார்.
இதற்கிடையில் திராவிடமணி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி உயிரிழந்தார். இதையடுத்து திராவிடமணியின் மகன் விஸ்வநாதன், சண்முகத்திடம் தங்களுக்கு கொடுக்க வேண்டிய மீதமுள்ள ரூ.10 லட்சத்து 27 ஆயிரத்தை கேட்டு உள்ளார். விஸ்வநாதனிடமும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்து உள்ளார்.
இதுகுறித்து விஸ்வநாதன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியிடம் புகார் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நெல் விற்பனை செய்த பணம் விஸ்வநாதனிடம் கொடுக்காமல் ஏமாற்ற முயன்ற சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story