சுயஉதவிக்குழு தலைவி தற்கொலை: நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


சுயஉதவிக்குழு தலைவி தற்கொலை: நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே சுய உதவிக்குழு தலைவி தற்கொலை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி லலிதாலட்சுமி (வயது 28). இவர், மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லலிதா லட்சுமி, மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக, கடைசி மாத தவணை தொகையை செலுத்துவதற்கு சில நாட்கள் காலதாமதமானது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி லலிதாலட்சுமியின் தாய் வீட்டுக்கு சென்றனர். அப்போது நிதி நிறுவன ஊழியர்கள், கடன் தவணை தொகையை கேட்டு அங்கிருந்த லலிதாலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் அடைந்த லலிதாலட்சுமி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய லலிதாலட்சுமி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது லலிதாலட்சுமியிடம் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார். அன்று இரவே லலிதா லட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்தார்.

நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் லலிதா லட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன மேலாளர் விஜய், ஆடிட்டர் கோபிநாத், ஊழியர்கள் ரெங்கராஜ், சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story