குத்தாலத்தில் விதியை மீறி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்: என்ஜின் டிரைவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


குத்தாலத்தில் விதியை மீறி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்: என்ஜின் டிரைவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:30 PM GMT (Updated: 8 Jun 2019 6:41 PM GMT)

குத்தாலத்தில் விதியை மீறி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

திருச்சி,

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. திருவெறும்பூர் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி மற்றும் தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக இந்த ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்திற்கு மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்படும் போது சிக்னல் கிடைப்பதற்கு முன்பே ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்கினார்.

ரெயிலின் கார்டு உடனடியாக வாக்கி-டாக்கியில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரெயிலை நிறுத்த அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சிறிது தூரம் சென்ற ரெயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த ரெயில் பின்னோக்கி இயக்கப்பட்டு குத்தாலம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த சம்பவத்தினால் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் உடனடியாக பணியில் இருந்து இறக்கப்பட்டு, மாற்று டிரைவர்களை நியமித்து ரெயில் இயக்கப்பட்டது.

2 பேர் பணியிடை நீக்கம்

இந்த நிலையில் சிக்னல் கிடைப்பதற்கு முன்பே விதியை மீறி ரெயிலை இயக்கியது தொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே இயக்குதல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் என்ஜின் டிரைவர் ஜான் பீட்டர், உதவி என்ஜின் டிரைவர் கார்த்தி ஆகிய 2 பேரையும் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் 2 பேரிடமும் நேற்று திருச்சி ஜங்ஷனில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மதுரை திருமங்கலம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி கோட்ட ரெயில்வேயில் சிக்னல் விதியை மீறி ரெயில் இயக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story