மங்களூருவில் கேபிள் வயரால் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை தலைமறைவாக இருந்த காதலன் கைது


மங்களூருவில் கேபிள் வயரால் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை தலைமறைவாக இருந்த காதலன் கைது
x
தினத்தந்தி 9 Jun 2019 3:30 AM IST (Updated: 9 Jun 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் கேபிள் வயரால் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு,

மங்களூரு அட்டாவர் அருகே லூயிஸ் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டிற்கு கடந்த 2-ந்தேதி ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் வந்துள்ளனர். அப்போது மங்களூருவில் தங்கி போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டி உள்ளது என்றும், வீடு வாடகை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும், அந்த வாலிபருடன் வந்த இளம்பெண்ணை தன்னுடைய மனைவி என்று அவர் தெரிவித்தார். இதனை நம்பிய லூயிஸ் அவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வாலிபர் மாயமாகி இருந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாண்டேஸ்வர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், இளம்பெண்ணை, அந்த வாலிபர் கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு...

இதையடுத்து போலீசார் இளம்பெண்ணும், வாலிபரும் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது இளம்பெண்ணின் செல்போனும், ஆதார் அட்டையும் கிடைத்தது. விசாரணையில் அவர், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரின் மகள் அஞ்சனா வசிஸ்டா (வயது 22) என்பதும், எம்.எஸ்.சி. பட்டதாரியான அவர், மங்களூருவில் தங்கி வங்கி தேர்வுக்கு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவருடன் தங்கியிருந்த வாலிபர் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அஞ்சனாவின் செல்போன் மூலம் அந்த வாலிபர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா பெனகோட்டகி தண்டா கிராமத்தை சேர்ந்த சந்தீப் ரத்தோடு (வயது 30) என்பதும், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு படிக்க மங்களூரு வந்ததும் தெரியவந்தது. அஞ்சனாவும், சந்தீப்பும் காதலித்து வந்ததும், அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கொலையான அஞ்சனாவின் ஏ.டி.எம். கார்டை திருடி சென்று அதனை பயன்படுத்தி 2 முறை ரூ.15 ஆயிரத்தை சந்தீப் எடுத்ததும் தெரியவந்தது.

காதலன் கைது

இந்த சம்பவம் குறித்து அஞ்சனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அவர்களிடம் அஞ்சனாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அஞ்சனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே, சந்தீப், அஞ்சனாவை கேபிள் வயரால் கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தீப்பை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தீப், சிந்தகி பகுதியில் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் பாண்டேஸ்வர் போலீசார் நேற்று சிந்தகிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சந்தீப்பை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரை போலீசார் மங்களூருக்கு அழைத்து வந்தனர். அவர் எதற்காக அஞ்சனாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story