மந்திரி டி.சி.தம்மண்ணா பழிவாங்கும் அரசியலை நிறுத்த வேண்டும் நடிகை சுமலதா எம்.பி. சாடல்


மந்திரி டி.சி.தம்மண்ணா பழிவாங்கும் அரசியலை நிறுத்த வேண்டும் நடிகை சுமலதா எம்.பி. சாடல்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:15 AM IST (Updated: 9 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி டி.சி.தம்மண்ணா பழிவாங்கும் அரசியலை நிறுத்த வேண்டும் என்றும், மக்கள் பணியாற்ற முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்றும் நடிகை சுமலதா எம்.பி. சாடியுள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா வெற்றி பெற்றார். அவர் பா.ஜனதாவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சுமலதா எம்.பி. நேற்று பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், மண்டியா தொகுதியில் தனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு சுமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மண்டியா தொகுதியில் எனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக பா.ஜனதா தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்தேன். நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தேன். பா.ஜனதாவுக்கு எனது ஆதரவு தேவை இல்லை. அக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 303 உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவேளை பா.ஜனதாவில் சேர நான் திட்டமிட்டால், அதற்கு முன்பு எனது தொகுதி மக்களிடம் கருத்து கேட்பேன். அவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் முடிவு செய்வேன்.

பழிவாங்கும் அரசியல்

மாநில போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, குறை கூற வந்த மக்களிடம், யாருக்கு ஓட்டு போட்டீர்களோ அவர்களிடம் போய் கேளுங்கள் என்று கூறியுள்ளார். அவர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். அவருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெற வைத்தவர்கள் மண்டியா மக்கள். மக்கள் பணியாற்ற முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலின்போது, இதுபோன்ற கருத்துகளை கூறியதால் தான் ஜனதா தளம் (எஸ்) தோல்வி அடைந்தது. மந்திரி டி.சி.தம்மண்ணா பழிவாங்கும் அரசியல் செய்வது சரியல்ல. இதை நிறுத்த வேண்டும். மக்களுக்கு சேவையாற்ற நிறைய தலைவர்கள் உள்ளனர்.

இவ்வாறு சுமலதா எம்.பி. கூறினார்.

Next Story