சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துக்கொலை


சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துக்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2019 3:45 AM IST (Updated: 9 Jun 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்துக்கொன்றார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார்.

சங்ககிரி, 

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் வெள்ளையம்பாளையம் வேடிச்சிக்காடு பகுதியில் வசித்து வந்தவர் சின்ன பழனி (வயது 81), விவசாயி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு துரைசாமி (58), சுப்பிரமணி(55) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் சின்ன பழனிக்கு சொந்தமான 2¾ ஏக்கர் விவசாய நிலத்தை 3 பாகங்களாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்து அதை தந்தை மற்றும் 2 மகன்கள் கவனித்து வந்தனர். இதனிடையே ஊர் பெரியவர்கள் முன்னிலையில், இரு மகன்களும் தலா ரூ.1½ லட்சம் கொடுத்தால் சொத்தில் அவர்கள் பங்கை சின்ன பழனி எழுதிக்கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன்படி துரைசாமி அந்த பணத்தை கொடுத்து விடவே, அவரது மகன் செல்வம் பெயரில் அவருக்குரிய பங்கு நிலத்தை சின்ன பழனி எழுதி வைத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு துரைசாமி இறந்து விட்டார்.

இது ஒருபுறம் இருக்க, சுப்பிரமணி பணம் கொடுக்காமல் தனக்கு பங்கு நிலத்தை எழுதி கொடுக்குமாறு தந்தையிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை சுப்பிரமணி, தனது தந்தையின் வீட்டுக்கு சென்று, தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சின்ன பழனி மறுக்கவே, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தந்தை என்றும் பாராமல் அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து தலை மற்றும் முகத்தில் ஓங்கி அடித்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சின்ன பழனி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து பதற்றம் அடைந்த சுப்பிரமணி நேராக சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கு வந்து சரண் அடைந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சின்ன பழனியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் சங்ககிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story