தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டிக்காக வீடுகளை இடிக்க கூடாது எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டிக்காக வீடுகளை இடிக்க கூடாது எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டிக்காக வீடுகளை இடிக்கக்கூடாது என்று தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் முதல் தென்கீழ்அலங்கம் வரை அகழி உள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அகழியை தூர்வாரி, அகழி கரையில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக மேலஅலங்கம், வடக்குஅலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அகழிகரையில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக வேறு இடங்களில் வீடு வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று 100-க்கும் மேற்பட்டோர் மேலஅலங்கத்தில் ஒன்று திரண்டனர். அப்போது 3 தலைமுறைகளாக வசித்து வரும் நாங்கள், வீடுகளை காலி செய்யமாட்டோம். எங்களை கொன்றுவிட்டு வீடுகளை இடித்து கொள்ளுங்கள் என கோஷங்கள் எழுப்பினர். இதை அறிந்த தி.மு.க. மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து மக்களை சந்தித்தார். அப்போது நாங்கள் இங்கே தான் வசிப்போம். எங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட எம்.எல்.ஏ., உங்களுக்கு துணையாக நானும், பழனிமாணிக்கம் எம்.பி.யும் இருப்போம் என பதில் அளித்தார்.

பின்னர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது.

தஞ்சை நகரை சுற்றியுள்ள அகழி கரையில் இருக்கக்கூடிய வீடுகளை இடித்துவிட்டு பூங்காக்கள் அமைக்க இருக்கின்றனர். 3 தலைமுறைகளாக குடியிருக்கக்கூடிய மக்களை காலி செய்துவிட்டு பூங்கா அமைப்பது என்பது தேவையில்லாத ஒன்று. அவர்களுக்கு பட்டா கொடுத்து அதே இடத்தில் அரசே வீடுகட்டி தர வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Next Story