நெல்லையில் பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை


நெல்லையில் பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை வடக்கு புறவழிச்சாலை அருகே தாமிரபரணி ஆற்றில் நேற்று பிற்பகலில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆற்றில் மிதந்த நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இறந்தவர் யார்? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. அவர் டி-சர்ட் மற்றும் முழங்கால் சட்டை அணிந்து இருந்தார். அவருக்கு 30 வயது இருக்கலாம் என்றும், உடல் அழுகி இருந்ததால் அவர் ஆற்றில் மூழ்கி 3 நாட்கள் ஆகி இருக்கும் என்றும் தெரியவந்தது.

அவரது உடலை ஆய்வு செய்ததில் தலை மற்றும் முகத்தில் 6 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. எனவே, மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தாமிரபரணி ஆற்றுக்குள் உடலை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அதாவது, வடக்கு புறவழிச்சாலை அருகில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு இரவு நேரத்தில் அழைத்து வந்து கொலை செய்து வீசினார்களா? அல்லது வேறு எங்கேனும் கொலை செய்து, உடலை வாகனங்களில் கடத்தி வந்து ஆற்றில் வீசினார்களா? என்பது தெரியவில்லை.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாலிபரை வெட்டிக்கொன்று உடலை ஆற்றில் வீசிச்சென்ற சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story