தைலமரங்களை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட முடியாது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி


தைலமரங்களை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட முடியாது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2019 11:15 PM GMT (Updated: 8 Jun 2019 8:19 PM GMT)

தைலமரங்களை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட முடியாது என புதுக்கோட்டையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தின் சார்பில், நடப்பட்டு உள்ள தைல மரக்காடுகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது புதுக்கோட்டை மணிப்பள்ளம் பகுதியில் கஸ்பா கிழக்கு காப்பு நிலப்பகுதியில் 56 எக்டர் பரப்பளவில் புதிதாக பயிரிடப்பட்டு உள்ள தைல மர தோட்டங்களையும், முள்ளூர் பகுதியில் உள்ள மத்திய நாற்றங்காலில் நடவு செய்யப்பட்டு உள்ள தைல மரக்கன்றுகள் மற்றும் முந்திரி மரக்கன்றுகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் உமா மகேஸ்வரி, முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் துரைராசு, தமிழ்நாடு வனத்தோட்ட கழக தலைவர் ரவிகாந்த் உபாதயா, தலைமை வன பாதுகாப்பாளர் கிரிதர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தைல மரங்களால் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வந்து உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும். தைலமரங்களை உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட முடியாது. வனத்தில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் வனவிலங்குகள் வசிக்கும் இடங்களில் உணவு பயிர்களை பயிரிடவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து சோலார் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மயில்கள் சரணாலயம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் இடையே எந்தஒரு கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது உள்ள இரட்டை தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ராஜன் செல்லப்பா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. யார் அவர்களை தடுக்கின்றனர் என குற்றச்சாட்டிருப்பது தவறானது. 2021 சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு முன்னால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். கட்சியில் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எப்போதும் இடம் கிடையாது. ஜெயலலிதாவின் ஆட்சியை அழிப்பேன் என்று தனியாக பிரிந்து போய் கட்சி தொடங்கிய தினகரனின் கதி என்ன என்பதை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பார்த்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இயற்கை ஆர்வலர்கள் சிலர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தைலமரங்களை அகற்றிவிட்டு, பராம்பரிய காடுகளை உருவாக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Next Story