ரூ.10 கோடியில் சிக்கராயபுரம் கல்குவாரிகளை இணைத்து நீர்த்தேக்கமாக மாற்ற திட்டம்


ரூ.10 கோடியில் சிக்கராயபுரம் கல்குவாரிகளை இணைத்து நீர்த்தேக்கமாக மாற்ற திட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 கோடியில் சிக்கராயபுரம் கல்குவாரிகளை இணைத்து நீர்த்தேக்கமாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை, குன்றத்தூரில் உள்ள சிக்கராயபுரத்தில் 25 கல்குவாரி குட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 150 முதல் 300 அடி வரை ஆழம் கொண்டவையாகும். இவற்றில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது.

சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்தது.

இதற்காக கல்குவாரியில் தேங்கிய தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தலாமா? என்பது குறித்து மாதிரி தண்ணீர் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்கட்டமாக பரிசோதனை செய்யப்பட்டது.

தடுப்பு சுவர்களில் துளை

இதில் குடிநீருக்கு பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்படி அப்பகுதியில் உள்ள 23 கல்குவாரிகளில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு தண்ணீர் எடுக்கப்பட்டது. தற்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும்நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்த தண்ணீர் கடந்த 3 மாதமாக எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது ஒரு சில கல்குவாரிகளில் தண்ணீரின் அளவு முற்றிலுமாக குறைந்து உள்ளது.

கடந்த ஆண்டு அப்பகுதியில் உள்ள 23 கல்குவாரிகளில் இருந்து 300 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டது. நடப்பாண்டு அப்பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்கும் வகையில் கல்குவாரி தடுப்பு சுவர்களில் துளையிட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இல்லை.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.10 கோடி நிதி

சிக்கராயபுரத்தில் 25 கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை முறையாக பயன்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தற்போது ரூ.10 கோடியில் கல்குவாரிகளை துளைகள் மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 கல்குவாரிகளில் 5 துளைகள் வீதம் இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அனைத்து கல்குவாரிகளும் இணைக்கப்படும். இவற்றில் மின்மோட்டார்கள் பொருத்துவது போன்ற பணிகள் நடக்க இருக்கிறது.

பறந்து விரிந்து கிடக்கும் ஏரிகளில் உள்ள தண்ணீர் விரைவாக ஆவியாவதுடன், பூமியும் உறிஞ்சிவிடுகிறது. தண்ணீர் ஆவியாவதை தடுக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து அவை தோல்வியை தழுவின.

இதனால் கோடைக்காலத்தில் முதலில் ஏரி தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்து களத்தில் இறங்கினோம். ஆனால் கல்குவாரியில் உள்ள தண்ணீர் பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீர் போன்றது. வெப்பத்தால் ஆவியாவது குறைவாகும்.

ஒரே நீர்த்தேக்கம்

அதே நேரம் பூமியும் கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சுவதற்கு வாய்ப்பு இல்லை. மாதக்கணக்கில் கல்குவாரி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதனால் வரும் காலங்களில் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக 25 கல்குவாரிகளையும் துளைகள் போட்டு ஒன்றாக இணைக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம் வரும் காலங்களில் கல்குவாரிகளில் தேங்கும் மழை நீர் துளைகள் வழியாக மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு வரும். இதன் மூலம் எளிதாக மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்க முடியும்.

தற்போது கல்குவாரிகளில் குறைவாக இருக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்திவிட்டு, அடுத்த பருவ மழைக்கு முன்பாக கல்குவாரிகளை ஒன்றாக இணைத்து ஒரே நீர்த்தேக்கமாக செயல்படுத்த இருக்கிறோம். கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 2 கல்குவாரிகள் இணைக்கப்பட்டது. அந்த முயற்சி முழு வெற்றியை பெற்று உள்ளது. இதனைத்தொடர்ந்து விரைவில் அனைத்து கல்குவாரிகளும் ஒன்றாக இணைக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story