மைசூருவில் இருந்து கோவைக்கு மதுபான நிறுவன கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்


மைசூருவில் இருந்து கோவைக்கு மதுபான நிறுவன கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு; பொதுமக்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் இருந்து கோவைக்கு, மதுபான நிறுவன கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் ஆவேசத்துடன் சிறைபிடித்தனர்.

சரவணம்பட்டி,

வெளி மாநிலங்களில் இருந்து கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் லாரிகள் மூலம் பிளாஸ்டிக், இறைச்சி மற்றும் மதுபான நிறுவன கழிவுகள் கொட்டப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று காலை கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டி செல்லும் சாலையோரம் உள்ள குளத்தில், மதுபான கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.

இதைதொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வர தாமதமானதால் பொதுமக்கள் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வருவதாகவும், பிரபல மதுபான நிறுவனத்தின் கழிவுகள் என்றும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், கேரளாவில் கொட்டுவதற்காக கழிவுகள் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் தற்போது கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கோவை–கேரள எல்லை பகுதியில் சோதனைச்சாவடிகளில் அதிக சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் நாங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் லாரியுடன் திரும்பி வந்து விட்டோம்.

இதைதொடர்ந்து கோவை புறநகர் பகுதியான காளப்பட்டியில் உள்ள குளத்தில் இந்த கழிவுகளை கொட்டுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் பொதுமக்கள் எங்களை சிறைபிடித்து விட்டனர் என்றனர். இந்தநிலையில் அந்த லாரியில் உள்ள கழிவுகள் ஏற்றப்பட்டு 1 வாரம் ஆகி இருப்பதால் கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் லாரியில் வந்தவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் முயற்சிக்காமல், உடனடியாக அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். மேலும் துர்நாற்றம் தாங்க முடியாமல் அங்கு இருந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் லாரியில் கொண்டு வந்த கழிவுகளுடன் அவர்கள் மீண்டும் மைசூருக்கு சென்றனர். நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்பட்ட 10 டன் கோழிக்கழிவுகளை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story