முதுமலை சாலையோரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


முதுமலை சாலையோரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2019 4:15 AM IST (Updated: 9 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை சாலையோரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் கவனமுடன் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடும் வறட்சி காணப்பட்டது. இதனால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் நீர்நிலைகளும் வறண்டதால் வனவிலங்குகள் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் வந்தன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் வேறு வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த வனவிலங்குகள் முதுமலைக்கு திரும்பி உள்ளன. இதனால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டமாக புல்வெளிகளில் நின்று மேய்வதை அதிகளவு காண முடிகிறது. இதை முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியால் வனவிலங்குகளை கண்ட உற்சாகத்தி்ல் கூச்சலிட்டு மகிழ்கின்றனர்.

காட்டு யானைகள் எளிதில் மனிதர்களை தாக்கும் குணம் உடையவை. எனவே வனத்துறையினரும் அடிக்கடி முதுமலை சாலையோரம் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை 5 மணிக்கு முதுமலை கார்குடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையோரத்தில் காட்டு யானைகள் அதிகளவு நின்று பசும்புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கேரள சுற்றுலா பயணிகள் சிலர் காட்டு யானைகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.

இதனால் காட்டு யானை ஒன்று வாலை முறுக்கியவாறு சுற்றுலா பயணிகளை தாக்க ஆயத்தமானது. இதை அறிந்த சக பயணிகள் இடையூறு செய்த சுற்றுலா பயணிகளை சத்தம் போட்டு அங்கிருந்து வேகமாக காரில் அழைத்து சென்றனர். இதேபோல் கூடலூர் பகுதி வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியில் நின்றிருந்தன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை சாலையோரத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சாலையில் வாகனத்தில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு ரசிப்பதில் தவறு இல்லை. ஆனால் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. காட்டு யானைகள் எதிர்பாராத வகையில் திடீரென தாக்கும் குணம் உடையவை. இதை வெளிமாநில சுற்றுலா பயணிகள் அறிவது இல்லை. எனவே காட்டு யானைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story