பனியன் நிறுவனத்தில் தையல் எந்திரங்கள் திருட்டு போன வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை


பனியன் நிறுவனத்தில் தையல் எந்திரங்கள் திருட்டு போன வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் தையல் எந்திரங்கள் திருட்டு போன வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு ஆதரவாக சகோதரர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் பொன்விஷ்ணு (வயது 24). இவர் திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி இரவு வழக்கம் போல பனியன் நிறுவனத்தை பொன்விஷ்ணு பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவருடைய நிறுவனத்தில் இருந்த 10 தையல் எந்திரங்கள், மடிக் கணினி, மற்றும் பணம் ரூ.9 ஆயிரத்து 500 ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து பொன்விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கணக்கம்பாளையத்தை அடுத்த வாஷிங்டன்நகர் பகுதியை சேர்ந்த ராஜா (38) என்பவருக்கு இந்த திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராஜா உள்பட மேலும் 2 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் போலீசார் அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் ராஜாவை விசாரணை என்ற பெயரில் 5 நாட்களாக போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கூறி ராஜாவின் சகோதரரான எம்.எஸ்.நகரை சேர்ந்த தினகரன் என்பவர் நேற்று மாலை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் சட்டையை கழட்டியபடி அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது “ தையல் எந்திரங்கள் திருட்டு வழக்கில் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்தே அவரை அழைத்து விசாரணை நடத்தினோம். மேலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை கைது செய்து, சிறையில் அடைக்க உள்ளோம்.” என்றனர்.

Next Story