திருப்புவனம் அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தை இடிக்க அமைச்சர் பாஸ்கரன் உத்தரவு
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பாஸ்கரன், மருத்துவமனை பழைய கட்டிடத்தி இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அரசு மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் தற்போது இயங்கி வருகிறது. திருப்புவனத்தை சுற்றியுள்ள 20–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்குள்ள புறநோயாளிகள் வார்டில் 100–க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய மருத்துவமனை கட்டிடத்தின் முன்பு ஏற்கனவே மருத்துவமனையாக செயல்பட்ட பழைய கட்டிடம் இடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. பழைய கட்டிடத்தில் தேவையில்லாத பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அடிக்கடி பழுதாகி வடுவதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அமைச்சர் பாஸ்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ அதிகாரிகளிடம் இது குறித்து விவரம் கேட்டறிந்து பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனையின் உள்புறத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை வெளிப்புற பகுதியில் வைத்து அதை முறையாக பராமரிக்கவும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். அமைச்சர் ஆய்வின் போது மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.