மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: 77 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 12.31 சதவீதம் குறைவு
மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 77.10 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 12.31 சதவீதம் குறைந்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
10-ம் வகுப்பு தேர்வு
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 70 ஆயிரத்து 887 மாணவர்களும், 7 லட்சத்து 47 ஆயிரத்து 715 மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 18 ஆயிரத்து 602 மாணவ, மாணவியர் எழுதி இருந்தனர்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவை மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவு வெளியானது. இதில், தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 12 லட் சத்து 47 ஆயிரத்து 903 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
77.10 சதவீத தேர்ச்சி
இவர்களில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 644 பேர் மாணவர்கள். 6 லட்சத்து 19 ஆயிரத்து 259 பேர் மாணவிகள். மாணவர்கள் 72.18 சதவீதமும், மாணவிகள் 82.82 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 77.10 சதவீதம் ஆகும்.
கொங்கன் மண்டலத்தில் அதிகப்பட்சமாக 88.38 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
மும்பை மண்டலத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 55 பேர் தேர்வை எழுதி இருந்தனர். இவர்களில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 71 பேர் தேர்ச்சி பெற்றனர். மும்பை மண்டலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 77.04 சதவீதம் ஆகும்.
மற்ற மண்டலங்களில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீத விவரம் வருமாறு:-
புனே 82.48, நாக்பூர் 67.27, அவுரங்காபாத் 75.20, கோலாப்பூர் 86.58, அமராவதி 71.98, நாசிக் 77.58, லாத்தூர் 72.87 சதவீதம்.
சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
இதே போல தேர்வு எழுதியவர்களில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 மாணவர்களும், 1 லட்சத்து 63 ஆயிரத்து 179 மாணவிகளும் டிஸ்டிங்சனில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் வகுப்பில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 480 மாணவர்களும், 2 லட்சத்து 38 ஆயிரத்து 898 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12.31 சதவீதம் குறைந்தது
இதேபோல மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 665 தனித்தேர்வர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்தனர். இவர்களில் 18 ஆயிரத்து 958 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தனித்தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் 32.32 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 89.41 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 77.10 ஆக வீழ்ச்சி அடைந்தது. அதன்படி தேர்ச்சி விகிதம் 12.31 சதவீதம் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பெரிய அளவில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story