ராஜன் செல்லப்பா கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வுபெற்ற போலீசார் சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–
இப்போது இந்தி படிப்பதில் தவறு கிடையாது. ஆனால் இந்தியை திணிப்பதை ஜெயலலிதாவின் அரசு கடுமையாக எதிர்க்கும். கட்டாய பாடமாக்குவதையும் எதிர்க்கும்.
கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருப்பது அவருடைய கருத்து. அடிமட்ட தொண்டனாக இருந்து தற்போது பெரிய பொறுப்புகளில் இருக்கிறேன். இது போன்ற கருத்து கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கும். இதற்கு நான் கருத்து சொல்ல தயாராக இல்லை.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வதை யாரும் தடுக்கவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் அங்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த தேர்வு கிடையாது. மத்தியில் வலுவான எதிர்ப்பை அரசு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு தோல்வியால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது. நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை போன்ற எண்ணங்கள் வராமல் இருக்க இறைவன் மனபலத்தை கொடுக்க வேண்டும்.
தற்போது வெற்றி பெற்ற தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
தமிழ் நாட்டிற்க்கு நீட் வேண்டுமா வேண்டாமா என்று மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்களை கொண்டு மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
8 வழிச்சாலை வேண்டுமா வேண்டாமா என்று அங்குள்ள விவசாயிகளை கேட்க வேண்டும் ஸ்டெர்லைட், மீத்தேன் என எதற்கு எடுத்தாலும் கருத்து கேட்கும் கூட்டத்திற்கு பொது மக்கள் வருவதில்லை. அரசியல் கட்சியினரே வருகின்றனர்.
குற்றம் ஒன்றைய குறிக்கோளாக சொல்லும் கட்சிகளுக்கு நாங்கள் என்ன சொன்னாலும் ஏறாது. இதில் முதல்–அமைச்சர் எடுத்திருக்கும் முடிவு சரியானது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.