எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முழுமையாக இணையவில்லை: அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முழுமையாக இணையவில்லை: அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2019 11:15 PM GMT (Updated: 8 Jun 2019 11:06 PM GMT)

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் முழுமையாக இணையவில்லை. அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ராஜன்செல்லப்பா தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சின்ன நெருடல்கள் கூட அ.தி.மு.க.வை வீழ்த்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் அதி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு இருக்கிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் அ.தி.மு.க.வை விட்டுச் செல்ல மாட்டார்கள். தி.மு.க. என்ன முயற்சி செய்தாலும், இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. அ.தி.மு.க.வில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அடுத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மட்டும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் இந்த ஆட்சியை காப்பாற்றிய, வெற்றி பெற்ற 9 சட்டசபை உறுப்பினர்கள் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இது யார் குற்றம்? கட்சி தலைமையின் குற்றமா? இல்லை அந்த 9 பேருக்கும் ஜெயலலிதா சமாதிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் உருவாகவில்லையா? இது மிகப்பெரிய வெற்றி. தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர், ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் தகவலை மற்றவர்களுக்கு சொல்லவில்லையா?

என்னுடன் பல எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனர். கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறோம். எங்களை போன்றவர்களின் கருத்து என்னவென்றால், அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும். ஒருவர் தலைமையில் கட்சியை கட்டுப்பாடுடன் கொண்டு செல்ல வேண்டும். வலியவர் பெரியவர் ஆகக்கூடாது. இந்த கருத்தை நான் சொல்வதால் கட்சிக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தம் கிடையாது. திறமையான, சுயநலமற்ற, மக்கள் பணியாற்றக்கூடிய ஒருவர் தலைமை ஏற்க வேண்டும். அப்போது தான் கட்சி கட்டுப்பாடுடன் இருக்கும். தொடர்ந்து வெற்றி பெற முடியும்.

ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட வேண்டும். எனவே ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும். மக்களை ஈர்க்கும் சக்தியான தலைவர் வேண்டும். இருவரில், அந்த ஒருவர் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியாக கூட இருக்கலாம். 2 பேர் இருப்பதால் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியவில்லை. இருவரும் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். மக்களை ஈர்க்கும் அளவுக்கு அ.தி.மு.க.வில் ஒரு தலைவர் வேண்டும்.

தி.மு.க.வில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்–அழகிரி என்று சொன்னார்கள். ஆனால் அழகிரி ஒதுங்கிக்கொண்டார். அது ஏன் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஸ்டாலினை யாரும் இன்னும் தலைவராக முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால் ஸ்டாலின் தலைவராகி விட முடியாது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா–ஜானகி என்று இருந்தார்கள். அதன்பின் ஜானகி ஒதுங்கிக்கொண்டார். அதே போல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இருக்கிறார்கள். ஆனால் முழுமையாக இணையவில்லை. சசிகலாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற பேச்சே கிடையாது. ஏனென்றால் அவர் கட்சியில் இல்லை. தினகரன் வரலாறு முடிந்துவிட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க–தி.மு.க.தான். அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. கலைக்க முயற்சித்தாலும் அது தோல்வியில்தான் முடியும். அது தி.மு.க.வுக்கே நன்றாக தெரியும்.

பொதுக்குழுவில் நான் வைக்க உள்ள இந்த கருத்தை இப்போது முன்மொழிந்து இருக்கிறேன். அ.தி.மு.க.வுக்கு ஒரு தலைமைதான் வேண்டும் என்று கருத்து சொன்னதால் என் மீது கட்சியில் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் நல்ல கருத்தைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். அமைச்சர் பதவிக்காக நான் இது போன்று பேசவில்லை. கட்சியின் நலனுக்காக பேசுகிறேன். ஜெயலலிதா இருந்திருந்தால் 10 முறை அமைச்சர்களை மாற்றி இருப்பார்.

தகுதி இல்லாத, ஆர்வம் இல்லாத அமைச்சர்களை மாற்றி இருப்பார். பலருக்கும் அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதில் தவறு இல்லை.

வெற்றி பெற்றவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று நன்றி தெரிவிக்க வேண்டும் என்று யாரும் வழிகாட்டவில்லை. இதனை செய்ய வேண்டிய ஒருங்கிணைப்பாளர் செய்யவில்லை. எனவேதான் அதிகாரம் படைத்த புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.

அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story