பள்ளிகொண்டா அருகே காரில் கடத்தி சென்ற ரூ.1 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் வாலிபர் கைது


பள்ளிகொண்டா அருகே காரில் கடத்தி சென்ற ரூ.1 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 8:55 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே காரில் கடத்தி சென்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

அணைக்கட்டு, 

பள்ளிகொண்டா போலீசார் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயமூர்த்தி, விநாயகம் மற்றும் போலீசார் அகரம்சேரி பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அகரம்சேரி - பள்ளிகுப்பம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை பார்வையிட்டு வரும்போது அவர்களை கடந்து ஒரு கார் வேகமாக சென்றது. அந்த காரை போலீசார் பின்தொடர்ந்து வந்தபோது அகரம்சேரி கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலை அருகே சாலை ஓரமாக கார் நிறுத்தப்பட்டிருந்தது.

காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சுமார் 50 கிலோ செம்மரக்கட்டைகள் சணல் பையால் மூடி இருந்தது.

அதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒடுகத்தூரை அடுத்த குருவராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ரகுமான் (வயது 20) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து ரகுமான் போலீசாரிடம் கூறுகையில், நான் பலமுறை மோட்டார்சைக்கிளில் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றுள்ளேன். 50 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பெங்களூருவுக்கு செல்லும் காரில் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஒரு கும்பல் 400 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்திக்கொண்டு இந்த வழியாக தான் வருவார்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த கார் எண்ணைகொண்டு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் விசாரித்தபோது இரவு 1.30 மணிக்கு கார் சுங்கச்சாவடியை கடந்து விட்டதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து செம்மரக்கட்டைகள் கடத்திய ரகுமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story