ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் ரூ.17 லட்சம் திருட்டு


ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் ரூ.17 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 10 Jun 2019 3:45 AM IST (Updated: 9 Jun 2019 9:02 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் ரூ.17 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு,

ஆற்காடு அருகே சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45) இவருக்கு ஜெயந்தி (40) என்ற மனைவியும், ரேவதி (22) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். எனவே நாகராஜன் தனக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அவரிடமிருந்து முன்பணமாக ரூ.17 லட்சத்தை பெற்றார்.

அந்த பணத்தை நாகராஜன் தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்தார். பின்னர் இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. மற்றொரு பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் அப்படியே இருந்தன.

இதுகுறித்து நாகராஜன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story