தக்கலை அருகே நர்சிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கைவரிசை


தக்கலை அருகே நர்சிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கைவரிசை
x
தினத்தந்தி 10 Jun 2019 3:45 AM IST (Updated: 9 Jun 2019 9:04 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே சாலையில் நடந்து சென்ற நர்சிடம் மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே கஞ்சிக்குழி ஆலத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். இவருடைய மனைவி ரீம்ராணி (வயது 32). இவர் அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். ரீம்ராணி தினமும் காலை 6 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள வீட்டில் பால் வாங்க செல்வது வழக்கம்.

அதேபோல், நேற்று காலை 6 மணிக்கு ரீம்ராணி பால் வாங்குவதற்காக சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அவருக்கு பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அந்த வாலிபர் ரீம்ராணி அருகில் வந்ததும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த ரீம்ராணி சுதாரித்துக்கொண்டு சங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு வாலிபரிடம் போராடியபடி திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். அதற்குள் சங்கிலி அறுந்து, அதில் இருந்த ஒரு பவுன் டாலர் கீழே விழுந்தது. இதைக்கண்ட வாலிபர் டாலரை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.  

இந்த சம்பவம் குறித்து ரீம்ராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவை ஆய்வு செய்தனர். நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். சாலையில் நடந்து சென்ற நர்சிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் நகைபறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story