ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் விரோத திட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் விரோத திட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணமாக இருந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நேற்று மாலையில் தூத்துக்குடிக்கு வந்தார். தொடர்ந்து அவர் திருச்செந்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திறந்த வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் உடன் சென்றனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருச்செந்தூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் பிரச்சினை ஏற்கனவே கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அரசு எதையும் செய்யக்கூடாது. மக்களுக்கான பாதுகாப்பை சரி செய்துவிட்டு, பிறகு எதை செய்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.
அ.தி.மு.க. அரசு நீடிப்பது சிரமமான ஒன்று என்று பல கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்த நிலையில் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை வெடித்து வெளியே வரத்தொடங்கி இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
மத்திய அரசு தமிழக மக்கள் மீது திணிக்கும் மக்கள் விரோத திட்டங்களை, தங்கள் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது. சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம், அதனை நிறைவேற்றுவோம் என முதல்-அமைச்சர் கூறி இருப்பது அவருடைய சொந்த லாபத்தையும் மனதில் வைத்துதான் கூறி இருக்கிறார். விவசாய நிலங்களை முதல்-அமைச்சர் முதலில் காப்பாற்றட்டும். அப்போது அவர் விவசாயியா, இல்லையா என்பது தெரியும்.
வெளி மாநிலத்தவர் யாரும் இங்கு வேலை பார்க்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இங்கே இருக்கக்கூடிய தமிழக மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.க. அரசின் நிலையை தெரிந்து கொள்ள தமிழக சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story