தென்காசி வட்டாரத்தில் சாரல் மழை குற்றாலம் சீசன் களை கட்ட வாய்ப்பு
தென்காசி வட்டார பகுதியில் நேற்று லேசான சாரல் மழை தூறியது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் குற்றாலம் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி,
தென் தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலமான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களில் சீசன் அருமையாக இருக்கும். இந்நேரத்தில் விழும் தண்ணீர் மூலிகை மகத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது. இதில் குளித்தால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும் என்பதால் இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமன்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். கடந்த ஆண்டு இந்நேரத்தில் சீசன் தொடங்கி விட்டது.
ஆனால் இந்த ஆண்டு கடுமையான கோடை வெயிலால் குற்றாலத்தில் தண்ணீர் விழாமல் பாறைகளாகவே காட்சி அளிக்கிறது. இதனால் சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து தென்காசி வட்டார பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல் பகுதியில் லேசான சாரல் மழை தூறியது.
நேற்று காலை குளிர்ச்சியான சூழல் நிலவியது. மிதமான வெயில் அடித்தது. மாலையில் பன்னீர் போன்ற சாரல் மழை தூறிக் கொண்டே இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அச்சன்புதூர், வடகரை, பண்பொழி, இடைகால், இலத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை தூறியது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்தது. குற்றாலம் மலைப்பகுதிகளின் மேலே மேக கூட்டங்கள் தவழ்ந்து சென்றன. இந்த நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் குற்றாலம் சீசன் களை கட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதே போல் வள்ளியூர் வட்டார பகுதியான நாங்குநேரி, பணகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மதியத்துக்கு பிறகு வெயில் குறைந்தது. லேசான சாரல் மழை தூறியது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்பை -6, சேரன்மாதேவி 2.40, மணிமுத்தாறு -1.80, நாங்குநேரி -3, பாபநாசம் -7, சேர்வலாறு -1 கொடுமுடியாறு -15.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதே போல் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து 77 கன அடியாக அதிகரித்தது. நேற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.
Related Tags :
Next Story