துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்க வளையல்கள் பறிமுதல்


துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்க வளையல்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 6:58 PM GMT)

துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் போன்ற வெளிநாடுகள் மற்றும் பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் திருச்சி வரும் பயணிகளில் சிலர் தங்கம் போன்றவற்றை கடத்தி வந்து, அதிகாரிகளிடம் பிடிபடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தஞ்சையை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, தனது கைப்பையில் 331 கிராம் எடை கொண்ட 4 தங்க வளையல்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சத்து 90 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story