ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.6½ லட்சம் தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் கொள்ளை


ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.6½ லட்சம் தங்க நகைகள்- வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jun 2019 11:15 PM GMT (Updated: 9 Jun 2019 7:06 PM GMT)

தஞ்சையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.6½ லட்சம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை முனிசிபல்காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது59). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி உஷாராணி(55). இவர்களுடைய மகன் சூர்யா(25).

கண்ணன் தனது வீட்டின் படுக்கை அறையில் ஏ.சி வசதியை ஏற்படுத்தி உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு கண்ணன் தனது மனைவி, மகனுடன் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருந்த படுக்கை அறையில் தூங்க சென்றார். இவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது நள்ளிரவு மர்மநபர்கள் சிலர், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

வீட்டின் மற்றொரு அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டனர். நேற்றுகாலை உஷாராணி எழுந்து அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது மற்றொரு அறை திறந்து கிடந்ததையும், பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததையும் பார்த்தார்.

உடனே அவர், பீரோவில் நகை, வெள்ளி பொருட்கள் இருக்கிறதா? என பார்த்தபோது அவைகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் பார்த்த அவர், தனது கணவர் மற்றும் மகனை எழுப்பி கூறினார். பின்னர் இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோ மற்றும் பிற இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். ராஜராஜன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொள்ளை போன வீட்டில் இருந்து புறப்பட்டு தெருவில் ஓடி கொண்டிருந்தது. அப்போது தெருவில் சுற்றி திரிந்த நாய் ஒன்று திடீரென மோப்பநாயை கடித்து குதறியது.

இதை பார்த்த போலீசார், அந்த நாயை விரட்டிவிட்டனர். காயம் அடைந்த மோப்பநாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கொள்ளை போன தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.6½ லட்சம் என கூறப்படுகிறது.

Next Story