கர்நாடக மந்திரிசபை 12-ந் தேதி விரிவாக்கம் காங்கிரசில் யாருக்கும் மந்திரி பதவி இல்லை ஆட்சியை காப்பாற்ற சுயேச்சைக்கு விட்டுக்கொடுக்கிறது


கர்நாடக மந்திரிசபை 12-ந் தேதி விரிவாக்கம் காங்கிரசில் யாருக்கும் மந்திரி பதவி இல்லை ஆட்சியை காப்பாற்ற சுயேச்சைக்கு விட்டுக்கொடுக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2019 5:30 AM IST (Updated: 10 Jun 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை வருகிற 12-ந்தேதி விரிவாக்கம் செய்யப்படு கிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி வழங்கப் படவில்லை. ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாக இருக்கும் ஒரு இடத்தை சுயேச்சைக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வரு கிறது.

குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று, ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 இடங்கள் என மொத்தம் 3 இடங்கள் காலியாக உள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. எதிர்க்கட்சியான பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இதனால் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பரவலாக பேசப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் 2 பேர் பா.ஜனதா தலைவர்களை நேரில் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்த சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரை முதல்-மந்திரி குமாரசாமி மந்திரி பதவி வழங்குவதாக கூறி தனது பக்கம் இழுத்தார்.

மேலும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலருக்கும் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த சிக்கல் நீங்கியது. இதற்கிடையே கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியை 3 மாதங்கள் ஒத்திவைக்கும்படி கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டார். இதையடுத்து பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ‘ஆபரேஷன் தாமரை‘யை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 12-ந் தேதி காலை 11.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஸ் மற்றும் காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல் அல்லது ராமலிங்கரெட்டி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. சுயேச்சை எம்.எல். ஏ.க்கள் 2 பேருக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளன.

அதன்படி ஜனதா தளம்(எஸ்) கட்சி தனக்கு உள்ள 2 இடங்களில் ஒன்றை சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கும், மற்றொரு இடத்தை கட்சியை சேர்ந்த பி.எம்.பாரூக் எம்.எல்.சி.க்கும் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசுக்கு உள்ள ஒரு இடம் மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

கட்சியில் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பு வழங்கினால், மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள மற்றவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்று அக்கட்சிதலைவர்கள் கருது கிறார்கள். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு கட்சியில் ஏற்படும் குழப்பத்தை தடுக்கவே காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பி.எம்.பாரூக் எம்.எல்.சி.க்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூருவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிறுபான்மையினரை கவரும் நோக்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு இடம் வழங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.எம்.பாரூக் அடிப் படையில் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story