ராயப்பேட்டையில் ரூ.24 லட்சத்துடன் 2 வாலிபர்கள் கைது; ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை


ராயப்பேட்டையில் ரூ.24 லட்சத்துடன் 2 வாலிபர்கள் கைது; ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2019 4:00 AM IST (Updated: 10 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டையில் ரூ.24 லட்சத்துடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தது ஹவாலா பணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடையாறு,

சென்னை ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், போலீஸ்காரர் ராஜேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் ராயப்பேட்டை கவுடியா மடம் சாலையில் அவர் கள் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள ஏ.டி.எம். மையம் அருகே 2 வாலிபர்கள் கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இருவரும் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனால் அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மேலும் அவர்களின் வயிற்று பகுதியில் சற்று வித்தியாசமாக இருந்ததால் இருவரையும் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் இருவரும் தங்கள் வயிற்று பகுதியில் மேலும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை மறைத்து வைத்து இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.23 லட்சத்து 92 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராயப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மண்ணடியை சேர்ந்த அபுபக்கர்(வயது 22) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (21) என்பது தெரியவந்தது.

மேலும் மண்ணடியில் ஒருவரிடம் தாங்கள் வேலை பார்ப்பதாகவும், அந்த பணத்தை ஒரு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து வரும்படி தங்கள் முதலாளி கூறி அனுப்பியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

எனவே இருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா?, அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார்?, ஏ.டி.எம். எந்திரம் மூலம் யாருடைய வங்கிக்கணக்கில் அந்த பணத்தை டெபாசிட் செய்ய முயன்றனர்? என்பது குறித்து 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுவதுபோல் உண்மையிலேயே அவர்களின் முதலாளிதான் அந்த பணத்தை டெபாசிட் செய்யும்படி கொடுத்து அனுப்பினாரா? அல்லது வேறு எங்கிருந்தாவது திருடி வந்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story