மாதவரம் அருகே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர்–இளம்பெண் பலி


மாதவரம் அருகே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர்–இளம்பெண் பலி
x
தினத்தந்தி 10 Jun 2019 4:45 AM IST (Updated: 10 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியதால் சாலையில் விழுந்த வாலிபர் மற்றும் இளம்பெண் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்கள்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை சின்னமாத்தூர் பாலசுப்பிரமணியன் நகர் 200 அடி சாலையை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்(வயது 20). அதேபோல் சின்னமாத்தூர் அருளானந்தம் நகர் 1–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சொர்ணராணி(21). இவர்கள் இருவரும் மாத்தூரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வேலை செய்து வந்தனர்.

நேற்று மதியம் ஜான் ஜெபராஜ், சொர்ணராணியை அவரது வீட்டில் விடுவதற்காக தனது மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். சின்னமாத்தூர் நோக்கி 200 அடி சாலையில் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் ஜான்ஜெபராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜான்ஜெபராஜ், சொர்ணராணி இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.

அப்போது மணலியில் இருந்து மாதவரம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய ஜான்ஜெபராஜ், சொர்ணராணி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் மீது எதிரே வந்து மோதிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் மற்றும் டிப்பர் லாரி டிரைவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story