மோட்டார்சைக்கிள்கள் மோதல்: தந்தை கண் எதிரே 3–ம் வகுப்பு மாணவி பலி
சென்னை மாதவரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில், தந்தை கண்எதிரேயே 3–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள். நாளை பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் இந்த சோகம் நேர்ந்தது.
செங்குன்றம்,
சென்னை கொடுங்கையூர் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாண்டில்யன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அட்சயா(வயது 7). இவள், கொடுங்கையூர் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள்.
அட்சயாவுக்கு நாளை(11–ந்தேதி) பிறந்தநாள் ஆகும். எனவே மகளுக்கு தேவையான புத்தாடை உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக சாண்டில்யன் தனது மகள் அட்சயாவுடன் மோட்டார்சைக்கிளில் அண்ணாநகர் சென்றார்.
அங்கு பிறந்தநாள் விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். மாதவரம் பொன்னியம்மன்மேடு அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், சாண்டில்யன் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் பின்னால் அமர்ந்து இருந்த அட்சயா, நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவள், தந்தை கண்எதிரேயே பரிதாபமாக இறந்தாள். எதிரேவந்து மோதிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அட்சயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.