கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாளை 6,104 பேர் எழுதினர் 706 பேர் வரவில்லை


கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாளை 6,104 பேர் எழுதினர் 706 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 10 Jun 2019 4:15 AM IST (Updated: 10 Jun 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாளை 6,104 பேர் எழுதினர். 706 பேர் வரவில்லை.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு நேற்று முன்தினம் 6 மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை எழுத 2,521 பேர் தகுதி பெற்றிருந்ததில் 2,237 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆசிரியர் பயிற்சிக்கான பட்டய படிப்பினை தகுதியாக கொண்டிருந்த ஆசிரியர்கள் இந்த தேர்வினை எழுதினர்.

இந்த நிலையில் பி.எட், எம்.எட் பட்டம் உள்ளிட்டவை பெற்றிருந்த ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாளுக்கான தேர்வானது, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட நேற்று 19 தேர்வு மையங்களில் நடந்தது. இதையொட்டி காலை 8 மணி முதலே ஆசிரியர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர்.

ஆசிரியர்களிடம் சோதனை

பின்னர், தேர்வுக்கூட நுழைவுசீட்டு மூலம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட தகவலின்பேரில் தங்களது தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். அப்போது அவர்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். செல்போன், பேஜர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் , கைப்பை போன்றவை தேர்வறைக்கு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இதனால் அவற்றை தேர்வறையின் வெளியே பத்திரமாக வைத்து விட்டு அனைவரும் தேர்வறைக்கு சென்றனர். சரியாக காலை 10 மணியளவில் தேர்வர்கள் முன்னிலையில் வினாத்தாள், விடைத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதும் தேர்வு தொடங்கியது.

6,104 பேர் எழுதினர்

தேர்வறைக்குள் வெளி நபர்கள் யாரும் வந்து விடாத வகையில் தேர்வு மையங்களின் வளாகத்திலும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேர்வு மையத்தின் பிரதான நுழைவு வாயில் கதவினை பூட்டு போட்டு பூட்டி, அதன் சாவியை போலீசார் வைத்திருந்தனர். மேலும் தேர்வறை வளாகத்திலேயே குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

வினாத்தாள், விடைத்தாள் மாற்றம் செய்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என கரூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு கண்காணித்தனர். அப்போது குறித்த நேரத்தில் தேர்வு தொடங்கி விட்டதா? என்பது பற்றி கேட்டறிந்தனர். மதியம் 1 மணியளவில் தேர்வு முடிந்ததும் விடைத்தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு ஆசிரியர்கள் வெளியே வந்தனர். 2-ம் தாளுக்கான தேர்வினை எழுத 6,810 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 6,104 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 706 பேர் தேர்வு எழுத வரவில்லை என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Next Story