அ.தி.மு.க.வில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி சேலத்தில் செம்மலை எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க.வில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி சேலத்தில் செம்மலை எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2019 4:45 AM IST (Updated: 10 Jun 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவகாரத்தில் அ.தி.மு.க.வில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று சேலத்தில் செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.

சேலம்,

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டியதை பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சியில் இருக்கிற சில பேர் வேண்டும் என்றே குறைகளை கூறி வருகின்றனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிற, இன்னும் பதவி கூட ஏற்காமல் உள்ள எஸ்.ஆர்.பார்த்திபன், பாலம் திறப்பு விழாவின்போது, விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என கூறியுள்ளார். பாலம் திறப்பு விழாவில் எவ்விதமான அழைப்பிதழும் அடிக்கவில்லை. செய்தித்துறை மூலமாக பத்திரிகைகளில் விளம்பரம் தான் கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு பொய் சொல்லியிருக்கிறார். எந்த எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர் சொல்ல வேண்டும். புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறக்கும் போது தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ. வரவில்லை என்பதற்காக சுமார் 10 நிமிடங்கள் அவர்களுக்காக முதல்-அமைச்சர் காத்திருந்தார். இது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது.

சேலம் மாநகரில் தேவையில்லாமல் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டையும் தி.மு.க.வினர் முன் வைக்கின்றனர். சேலம் மாநகரிலும், மாவட்ட பகுதியிலும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேவையில்லாத இடங்களில் பாலங்கள் கட்டவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.2,750 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது.

சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.941 கோடிக்கு பல்வேறு திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதனால் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மதுரையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியது, வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டரும் கருத்து கூறும் சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதன்படி கருத்துக்கள் கூறப்படுகிறது. கட்சிக்கு ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்பதை கட்சியின் தலைமை பரிசீலித்து ஒரு நல்ல முடிவை எடுக்கும். இந்த ஆட்சியை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று மிகச்சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார். கட்சியை பொறுத்தளவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சருடன் கலந்து பேசி நல்ல முறையில் நடத்துகிறார்.

கட்சிக்குள் எந்த கோ‌‌ஷ்டி பூசலும் இல்லை. ஆனால் அ.தி.மு.க.வில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. ஒரு தலைமையா? இரு தலைமையா? என்பதற்கு கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். ஒரு மாடு பூட்டிய வண்டி இருக்கிறது. அதேபோல் 2 மாடுகள் பூட்டிய வண்டியும் இருக்கிறது. ரோட்டில் பயணிக்கும் போது, இரு வண்டிகளுமே சிறப்பாகவே செல்லும். அதனால் ஒரு மாடு பூட்டிய வண்டி வேண்டுமா? அல்லது 2 மாடுகள் பூட்டிய வண்டி வேண்டுமா? என்றும், அதில் எது சிறந்தது என்ற விவாதமே தேவையில்லை. வண்டி ஒழுங்காக செல்லும்போது எந்த பிரச்சினையும் கிடையாது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் நிலைகுலைந்து உள்ளோம். அதை சரிசெய்து, சுதாரித்து எழுந்து வர நிதானம் தேவை. மாறாக திசை திருப்ப கூடாது. எங்களுக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டும். எங்களுடைய தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களிடையே குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிற வதந்தி தானே தவிர, ஆட்சியிலோ, கட்சியிலோ எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story