ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 9:04 PM GMT)

ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள மெயின் அருவி, சினி அருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்வார்கள். பரிசலில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்வார்கள். முதலைப்பண்ணைக்கு சென்று கண்டு ரசிப்பார்கள். தொங்கு பாலம், பார்வை கோபுரம் ஆகியவற்றில் ஏறி காவிரியின் அழகை பார்த்து ரசிப்பார்கள்.

அருவியில் தண்ணீர் கொட்டும் காலங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இதேபோல் விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து ஆனந்தம் அடைந்தனர். பரிசல்களில் சென்று ஆற்றின் அழகை ரசித்தனர். இதனால் நடைபாதையையொட்டி காவிரி ஆற்றின் பகுதி, அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பரிசல்களில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்ததையும் பார்க்க முடிந்தது.

Next Story