ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளை 30 ஆயிரத்து 72 பேர் எழுதினார்கள்


ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளை 30 ஆயிரத்து 72 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி,கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளை 30 ஆயிரத்து 72 பேர் எழுதினர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, கிரு‌‌ஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் 18 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. நேற்று முன்தினம் நடந்த முதல் தாள் தேர்வை 5,356 பேர் எழுதினார்கள்.

இந்தநிலையில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 36 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 12,187 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை, 11,532 பேர் எழுதினர். 655 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் தேர்வர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வினை 36 முதன்மை கண்காணிப்பாளர்கள், 36 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 39 கூடுதல் துறை அலுவலர்கள், 610 அறைக் கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். மேலும் பறக்கும் படையினர், நிலையான படை உறுப்பினர்கள் என 72 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி 2-ம் தாள் தேர்வு 52 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத மொத்தம் 20,538 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் மொத்தம் 18,540 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1998 பேர் தேர்வு எழுத வரவில்லை.

விண்ணப்பித்தவர்களில் 90.27 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். 9.73 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மேற்பார்வையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அரசு பணியாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்தில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் முதல் உதவி சிகிச்சை குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. தேர்வு மையங்களில் தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story