சேலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


சேலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்ெகடுத்து ஓடியது.

சேலம்,

சேலத்தில் கடந்த பல நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயில் சற்று குறைந்து நேற்று மாலை மிதமான வெயில் அடித்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகரில் நேற்று மாலை 5.30மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பலத்த மழை வரும் என்று பொது மக்கள் எதிர்பார்த்தனர்.

சிறிது நேரத்தில் திடீரென்று சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. இந்த சூறாவளி காற்றால் மாநகர் பகுதியில் பல இடங்களில் வாகனங்களில் சென்றவர்கள் தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரும் அவதிப்பட்டனர்

அதன்படி 4 ரோடு, பெரமனூர்் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் புழுதி பரவியது. இதனால் நடந்து சென்றவர்கள் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டு தட்டு தடுமாறி நடந்து சென்ற காட்சியை காண முடிந்தது. குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகே மண் மேடு குவிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து மண் துகள்கள் சூறாவளி காற்றில் கலந்து பறந்து வந்தது.

இதனால் புதிய பஸ் நிலையத்தில் நின்றிந்த பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் பல இடங்களில் இந்த சூறாவளி காற்றால் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், தட்டிகள் சாய்ந்தன. ஓமலூர் மெயின் ரோட்டில் இருந்த ஒரு விளம்பர பேனர் கிழிந்து காற்றில் பறந்து அருகில் உள்ள ஒரு மின்கம்பம் மீது விழுந்து கிடந்தது. மேலும் பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்்தன. இதனால் அந்தந்த இடங்களில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் மாலை 6 மணி அளவில் திடீரென்று பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரை 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் தமிழ் சங்கம் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக நகர்ந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் மாநகர் பகுதியில் பல இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இ்ந்்த மழையால் நேற்று இரவு மாநகர் பகுதி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story