காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்; ப.சிதம்பரம் திறந்து வைத்தார்
காரைக்குடியில் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
காரைக்குடி,
காரைக்குடி நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம், மேலஊருணி வாய்க்கால் தெருவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சார்பில் கட்டித்தரப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம். எல்.ஏ. தலைமை தாங்கினார். கார்த்திக் சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். புதிய கட்டிடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் நடந்த கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன், காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகி புஷ்பராஜ், வக்கீல் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் பேசினார். அதில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மிக நீடித்த கூட்டணி, அதனால் தான் இங்கு வெற்றி பெற்று உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் இதே நிலையில் கூட்டணி நீடித்தால் 70 சதவீத இடங்களில் வெற்றி பெறுவோம். அதே போல் 1½ ஆண்டுகளில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் 75 சதவீதம் வெற்றி பெற முடியும் என்றார்.