மாவட்டத்தில் 5 இடங்களில் போலீஸ் குறைதீர்க்கும் முகாம்; 333 மனுக்களுக்கு சமரச தீர்வு
சிவகங்கை மாவட்டத்தில் 5 இடங்களில் போலீஸ் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் 333 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை,
மாவட்டதில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் தருபவர்களுக்கு உடனடி தீர்வு பெற்று தரும் வகையில் மாதந்தோறும் துணை உட்கோட்ட அளவிலான போலீஸ் குறைதீர்க்கும் முகாம்களை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் நேற்று சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் மானாமதுரை ஆகிய 5 இடங்களில் போலீஸ் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன.
சிவகங்கையில் நடைபெற்ற முகாமை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற முகாமை சென்று பார்வையிட்டார். காலையில் தொடங்கிய முகாம் மாலை வரை நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:– மாவட்டத்தில் 5 இடங்களில் அந்தந்த பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் முகாம் நடைபெறுகிறது.
இதில் ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்டுள்ள 99 புகார்கள் மற்றும் தற்போது பெறப்பட்ட புகார்களை சேர்த்து மொத்தம் 431 மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
ஒவ்வொரு மனுவையும் மனுதாரர், எதிர்மனுதாரர் என இருவரையும் வரவழைத்து நேருக்கு நேராக வைத்து விசாரித்து சமரசம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 333 மனுக்களுக்கு உடனடி சமரச தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.