குடிநீர் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்; சதன் பிரபாகர் எம்.எல்.ஏ.உறுதி


குடிநீர் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்; சதன் பிரபாகர் எம்.எல்.ஏ.உறுதி
x
தினத்தந்தி 10 Jun 2019 4:00 AM IST (Updated: 10 Jun 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும் என்றும், மற்ற தேவைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

கமுதி,

கமுதி பகுதியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். பின்னர் கமுதி பகுதியில் மண்டல மாணிக்கம், மரக்கலம், வலையபூக்குளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது மண்டல மாணிக்கம், வலைய பூக்குளம், கழுவன் பொட்டல் கச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், ரே‌ஷன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போன் மூலமாக தொடர்புகொண்டு மக்களின் குறைகளை போக்க அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மண்டலமாணிக்கம், வலையபூக்குளம், புதுப்பட்டி, மரக்குளம், சின்ன உடப்பங்குளம், இடைச்சியூரணி உள்பட 12 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாநில விவசாய இணை செயலாளர் கர்ணன், கமுதி யூனியன் முன்னாள் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் பேசியதாவது:– மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும். மின் வசதி, கலையரங்கம், சாலை, அலங்காரகற்கள் போன்றவை படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும். ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் இதுபோன்று மக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் ரே‌ஷனில் அரிசி வழங்கினால் இதுபற்றி முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட மின்வாரிய தொழிலாளர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் திம்மநாதபுரம் கருமலையான், பம்மனேந்தல் சேகரன், கே.எம்.கோட்டை கருப்பசாமி, முன்னாள் ஆர்.டி.ஓ. சிவக்குமார், நரியன் சந்தானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story