திருமங்கலம் அருகே இருதரப்பினர் தகராறில் 4 பேருக்கு வெட்டு: வீடுகளை சூறையாடிய 78 பேர் மீது வழக்கு; 11 பேர் கைது


திருமங்கலம் அருகே இருதரப்பினர் தகராறில் 4 பேருக்கு வெட்டு: வீடுகளை சூறையாடிய 78 பேர் மீது வழக்கு; 11 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் பகுதிக்குள் புகுந்து 4 பேரை அரிவாளால் வெட்டி வீடுகளை சூறையாடினர். இதுதொடர்பாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரையூர்,

திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வலையபட்டி கிராமத்தில் ஒரு தரப்பினர் நடத்த இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு காரணம் மற்றொரு தரப்பினர்தான் என்று அந்த தரப்பினர் கூறிவந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் மற்றொரு தரப்பினர் வசிக்கும் தெருவிற்கு செல்லும் குடிநீர் குழாயை அந்த தரப்பினர் அடைத்து தண்ணீர் செல்லாமல் தடுத்து உள்ளனர். இதனால் குடிநீர் கிடைக்காத தரப்பினர் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தரப்பினர் நேற்று முன்தினம் இரவு கும்பலாக குடிநீர் கிடைக்காத தரப்பினர் வசிக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்த ஆறுமுகம், கருப்பசாமி, முனியாண்டி, மணி ஆகிய 4 பேரை அரிவாளால் வெட்டி உள்ளனர். மேலும் அங்குள்ள 15 வீடுகளையும், இருசக்கர வாகனங்களையும், வீடுகளில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். பின்னர் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஆறுமுகம் மேல்சிகிச்சைக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் விஜயகாண்டிபன் மற்றும் போலீசார் வலையபட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து முருகன் என்பவர் நாகையாபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தாக்குதல் நடத்திய தரப்பை சேர்ந்த சித்தநாதன், சிவா, விஜய ஒச்சம்மாள், கண்ணன், பாமா, மீனா, விஜயசங்கர் உள்பட 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எஸ்.வலையபட்டி கிராமத்தில் பதற்றத்தை குறைக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கிராமத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story