புதுவையை நீர்வளமிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் - கவர்னர் வேண்டுகோள்
புதுச்சேரி பசுமையாகவும், நீர்வளமிக்க மாநிலமாகவும் மாற வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கிரண்பெடி உள்பட கவர்னர் மாளிகை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அரசு செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி.சுந்தரி நந்தா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா மற்றும் அரசு செயலாளர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு கவர்னர் கிரண்பெடிக்கு பூங்கொத்துக்களை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது விழா மலரும் வெளியிடப்பட்டது.
அதேபோல் கவர்னர் மாளிகையில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பலரும் கவர்னர் கிரண்பெடியை நேரில் சந்தித்து புத்தகங்கள், பூங்கொத்து உள்ளிட்டவைகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுச்சேரிக்கு சேவை செய்வதே என் எண்ணம். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. மக்களுடைய வரிப்பணமானது முறையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும். நான் எனது பிறந்தநாளையொட்டி வேண்டிக்கொள்வது புதுச்சேரி பசுமையாகவும், நீர்வளமிக்க மாநிலமா மாற வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.