அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு


அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 3:14 PM GMT)

அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

மக்கள் குறைதீர்க்கும் நாளான நேற்று குமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஏராளமானோர் மனு கொடுத்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

கூடங்குளத்தை சுற்றி இருக்கிற கிராமங்களில் அணு உலை விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. அணு உலைகள் மூலமாக விபத்துகள், அணு கசிவுகள் ஏற்பட்டால் பாதுகாப்பதற்கான எந்த திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. கூடங்குளத்தில் அணு கசிவுகள் ஏற்பட்டால் பாதுகாப்பதற்கான எந்தவித அவசர நடவடிக்கையோ, போர்க்கால நடவடிக்கையோ மத்திய, மாநில அரசிடம் இல்லை. கூடங்குளத்தில் அணுகசிவு ஏற்பட்டால் தமிழ்நாடு, கேரளா, இலங்கை பாதிப்படையும். மத்திய– மாநில அரசுகளின் ஒப்புதலுடன் அணுக்கழிவுகளை சேகரிக்கக்கூடிய மையத்தை கூடங்குளத்திலேயே அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது அணு உலை ஒப்பந்தத்துக்கு விரோதமான செயலாகும். அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது என்பதுதான் விதி. இந்தநிலையில் மத்திய அரசு தமிழ்நாடு அரசினுடைய ஒப்புதலோடு அணுக்கழிவு மையம் அங்கு அமைக்கப்பட்டு வருவது மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் செயலாகும். எனவே மாநில அரசு கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அழகப்பபுரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சிலர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் அழகப்பபுரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறோம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களாகிய நாங்கள் படித்து வரும் இந்த கல்லூரியில் மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்தார்கள். அப்போது கல்லூரியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதனால் எங்களது மாற்றுச்சான்றிதழை குழித்துறையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் ஒப்படைத்து எங்களை அங்கு சேர்த்துவிட உத்தரவிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் எதையும் செய்யவில்லை. மாற்றுச்சான்றிதழை குழித்துறையில் உள்ள கல்லூரிக்கு வழங்க மறுக்கிறார்கள். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடமும் 2 முறை புகார் செய்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் முதல் பாடங்கள் எதுவும் சொல்லித்தரவில்லை. எனவே எங்களுக்கு விரைவில் தேர்வு தொடங்க இருப்பதால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரை விசாரணை நடத்தி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களின் மாற்றுச்சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடுக்கரை ஊராட்சி அண்ணா  காலனியை சேர்ந்த மோகன்ராஜ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்களது காலனி செங்குத்தான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள அஞ்சுகிரி குன்றில் உள்ள முருகன் கோவில் முன்பு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் கீழ் உள்ள தரை வெறும் மண்ணால் எழுப்பப்பட்டுள்ளது. எனவே இது பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தில் மாணவ–மாணவிகள், இளைஞர்கள் தினமும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளையாட்டு மைதானத்துக்கு காங்கிரீட் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். அங்கு தேங்கும் மழைநீரை ஓடை வாயிலாக நடுப்பாஞ்சான் குளத்துக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

திருவரம்பு அருகே கல்லாம்பொற்றை ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், கல்லாம்பொற்றை பகுதியில் புத்தன் வீட்டு குளம் உள்ளது. இந்த குளத்து நீர் மூலம் பல ஏக்கர் நிலம் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் அந்த குளத்து நீரை பயன்படுத்துகிறார்கள். இதில் சிலர் குப்பைகளை கொட்டியும், மண் நிரப்பியும் குளத்தை அபகரித்து, ஊர் மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் தடுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொதுவினியோக ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளையை சேர்ந்த நிர்வாகிகள் மாநில பொருளாளர் குமரி செல்வன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

உணவுப்பொருள் வழங்கல் மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையரின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் நுகர்பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பப்படும்போது ஒவ்வொரு மூடையும் கலர் நூல் போட்டு தைத்து அனுப்ப வேண்டும். மாவட்ட கிட்டங்கிகளில் எடைமேடை அமைத்து பொருட்கள் எடைபோட்டு தனி எடைமேடை ரசீது கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எடை குறைவாக பொருட்கள் அனுப்பும் அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story