தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது முத்துராயன்தொட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது.
மேலும் குடிநீரை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம், தளி ஒன்றிய ஆணையாளர் முருகன், ஆணையாளர் சீனிவாசசேகர் மற்றும் தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மண்டல துணை தாசில்தார் வளர்மதி ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முத்துராயன் தொட்டி கிராமத்தில் ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story