செந்துறை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


செந்துறை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது.

இந்த கடையை மூடக்கோரி கடந்த மே மாதம் 12-ந் தேதி திடீரென டாஸ்மாக் கடை முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர்.

ஆனால் அதையும் மீறி டாஸ்மாக் கடை முன்பு திரண்ட பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாட முயன்றனர். பெண்களின் ஆவேச போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 13-ந் தேதி உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது‌. பேச்சுவார்த்தை முடிவில் 3 மாதத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி டாஸ்மாக் கடையை மூடக்கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை டாஸ்மாக் கடை மூடப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று திரண்டு வந்து சிறுகளத்தூர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் (செந்துறை) ராஜ்குமார், (குவாகம்) சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், மீண்டும் ஒரு முறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்குமாறு கூறினர். இதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின்போது அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story