100 அடி சாலையில் தடுப்புக் கட்டைகளை அகற்ற கோரி திடீர் மறியல்


100 அடி சாலையில் தடுப்புக் கட்டைகளை அகற்ற கோரி திடீர் மறியல்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 8:17 PM GMT)

புதுவை 100 அடி சாலையில் தடுப்பு சுவரை மறித்து வைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு அவற்றை அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் வாகனங்கள் திரும்பக் கூடிய அளவுக்கு இடைவெளி விடப்பட்டு இருந்தது. இதை என்ஜினீயர்ஸ் காலனி, ஜெயமூர்த்தி நகர், ஜெயா நகர், ஆசிரியர் காலனி, திருப்பூர் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இடைவெளி பகுதியில் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டு வழி அடைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தூரம் சென்று சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் 100 அடி சாலையில் தடுப்பு சுவர் பகுதியில் இருந்த இடைவெளியை மறைத்து வைக்கப்பட்ட தடுப்புக்கட்டைகளை அப்புறப்படுத்த வேண்டுமென காவல் துறைக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவை அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன. இந்தநிலையில் அந்த தடுப்புக்கட்டைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று காலை 100 அடி சாலையில் திடீரென பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்புக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதன்பின் போக்குவரத்து சீரானது.

Next Story