மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு


மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் கடந்த 5 கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஆ.ராசா எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

கோத்தகிரி, 

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கோத்தகிரிக்கு வந்தார். அவரை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோத்தகிரி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த ஜீப்பில் வந்து ஆ.ராசா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ப.மு.முபாரக், முன்னாள் அமைச்சர் இளித்தொரை கே. ராமச்சந்திரன், கோத்தகிரி நிர்வாகிகள் போஜன், ராஜூ,பெந்தோஸ், ஜாபர், லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும் வெற்றியை பெறுவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். அவரது கடும் உழைப்பினால் தான் இந்திய நாடே மோடி பக்கம் இருந்தாலும் தமிழகத்தில் பெருவாரியான வெற்றியை பெற முடிந்தது.

மோடியின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 5 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்.

மத்தியில் நமது ஆட்சி அமையாவிட்டாலும் விரைவில் மாநிலத்தில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வரும். அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து பணிகளும் செய்யப்படும். அவர் கொள்கைக்காக கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ளார். இந்த மகத்தான வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story