வாய்க்கால் பராமரிப்பு காரணமாக நொய்யல் பகுதியில் விவசாய பணிகள் பாதிப்பு


வாய்க்கால் பராமரிப்பு காரணமாக நொய்யல் பகுதியில் விவசாய பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 8:27 PM GMT)

வாய்க்கால் பராமரிப்பு காரணமாக நொய்யல் பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நொய்யல்,

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள காரணாம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து புகளுர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே புகளுர் வாய்க்கால் செல்கிறது. இவ்வாய்க்கால் நொய்யல் மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி வழியாகவும், அதேபோல் புகளுர் செம்படாபாளையம் வழியாக பிரியும் முதலியார் வாய்க்காலில் இருந்து கடம்பங்குறிச்சி என்.புதூர் வாங்கல், கருக்கம்பாளையம் வழியாக செல்கிறது.

கரூர் மாவட்டத்தில் நொய்யல் முதல் வாங்கல் வரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு, வாழை, வெற்றிலை, நெல், கோரை, பூக்கள், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பணப் பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் புகளுர் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக காரணாம்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து புகளுர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. புகளுர் வாய்க்காலை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களின் விவசாய பயிர்களான வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை, நெல், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

விவசாய பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. எனவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து புகளுர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என நொய்யல் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story