மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இளம் மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற கால அவகாசம் கேட்டு மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இளம் மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற கால அவகாசம் கேட்டு மனு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 8:33 PM GMT)

இளம் மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற கால அவகாசம் கேட்டு பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு வந்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், தங்களுடைய கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எனவும், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றும் கூறப்பட்டிருந்தது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த மனுவில், ‘‘தனியார் மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்ற பெயரில் குழுக்கள் பெருகிவிட்டன. குழு உறுப்பினர்களில் கடன் பெற்றவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் தவணை தொகையை கட்ட முடியவில்லை என்றால் அவர்களை கேவலப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை தனியார் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடைப்பிடிப்பதில்லை. கந்து வட்டி கொடுமையில் பெண்கள் சிலர் சிக்கி தவிக்கின்றனர். எனவே மைக்ரோ ைபனான்சாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை தடை செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் ‘‘சமீபத்தில் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் 66 இளம் மழலையர் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கான கட்டிட சான்றிதழ், தீயணைப்பு துறையினரின் சான்றிதழ், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படையானவற்றை கொண்ட பள்ளிகளும் இதில் அடங்கி உள்ளன. இளம் மழலையர் பள்ளிகள் நடத்த அங்கீகார அனுமதி அளிக்க கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. அங்கீகாரம் பெற கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு மழலையர் பள்ளிகள் இயக்க முக்கியமான 4 சான்றிதழ்கள் பெற்ற பள்ளிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர், அப்பகுதியில் ஜூலை மாதம் நடைபெற உள்ள கருப்பசாமி கோவில் திருவிழாவில் சாமி வீதி உலா தங்கள் பகுதிக்கு வர மற்றொரு தரப்பினர் மறுப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு கொடுக்குமாறும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் அளித்த மனுவில், திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாநகரில் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தினர் அளித்த மனுவில், ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் சிவராசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Next Story