கோதுமலை அடிவார கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கு
வாழப்பாடி அருகே கோதுமலை அடிவார கிராமங்களில், மர்ம விலங்குகள் புகுந்து ஆடுகளை வேட்டையாடுவது தொடர்ந்து வருகிறது. எனவே, அந்த மர்ம விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழப்பாடி,
வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், ஆடு, கறவைமாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் தொழிற்பயிற்சி மையத்திற்கு பின்பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வளர்த்து வந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து தின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி வனத்துறையினர், ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்குகளை பிடிக்க, கூண்டு தயார் செய்து அதற்குள் ஆட்டுக்குட்டி கட்டி வைத்து முயற்சித்தனர். ஆனாலும் மர்ம விலங்கு பிடிபடவில்லை.
இந்நிலையில், வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரத்திலுள்ள தூக்கியாம்பாளையம், குமாரசாமியூர், மேலூர், மாரியம்மன்புதூர் கிராமங்களில் மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் பலியாவது தொடர் கதையாகி உள்ளது.
கடந்த மாதம் 27-ந் தேதி இரவு குமாரசாமியூர் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, விவசாயி சங்கர் என்பவர் வளர்த்து வரும் ஆட்டுக்குட்டியை கடித்து தின்றது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி வனத்துறையினர் இப்பகுதியில் சோதனை நடத்தினர்.
வாழப்பாடி பகுதிக்கு மாமிசம் உண்ணும் விலங்குகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இறைச்சிக்காக வெட்டப்படும் கோழி, ஆடு மற்றும் மாட்டிறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் இவற்றை தின்று ருசி கண்ட தெருநாய்கள், கழிவுகள் கிடைக்காத நிலையில் கிராமத்திற்குள் புகுந்து ஆடுகளை கடித்து தின்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று வனத்துறையினர் கருதினர்.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக குமாரசாமியூர் கிராமத்தில் இரவு நேரத்தில் மீண்டும் மர்ம விலங்குகள் உலவி வருகின்றன. கடந்த இரு தினங்களில் மட்டும் இந்த கிராமத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., பழனிசாமி, ராஜேந்திரன், சின்னதம்பி உள்ளிட்ட விவசாயிகள் வளர்த்து வரும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்குகள் வேட்டையாடி தின்று விட்டன.
இதனால் பீதியடைந்துள்ள கோதுமலை அடிவார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், ஆடுகளை வேட்டையாடி வரும் மர்மவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்குகளுக்கு பலி கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று கொடுக்க வேண்டுமென, வாழப்பாடி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வாழப்பாடி வனச்சரகர் ஞானராஜ் கூறும் போது, ‘வாழப்பாடி அருகே குமாரசாமியூர் கிராமத்தில் இரவு நேரத்தில் மர்ம விலங்குகள் புகுந்து ஆடுகளை கடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மர்மவிலங்கை கண்டறிந்து பிடிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story