காட்டுயானை தாக்கி 2 பேர் பலி, 2 ஆடுகளையும் மிதித்து கொன்றது
காட்டுயானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 ஆடுகளையும் காட்டுயானை மிதித்து கொன்றது.
தேனி,
தேனி மாவட்டம் உத்தம பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பெரும்புவெட்டி ஓடை பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஆட்டுக்கிடை போடப்பட்டு இருந்தது. ஆடுகளை பாதுகாக்க, மேலச்சிந்தலைச்சேரியை சேர்ந்த விவசாயி கெப்புசாமி (வயது 62), தென்னந்தோப்பில் படுத்து இருந்தார். அவர் அருகே தோட்ட காவலாளி அணைப்பட்டியை சேர்ந்த அய்யாவு (63) என்பவரும் தூங்கி கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு ஒற்றை காட்டுயானை அங்கு வந்தது. யானையை பார்த்ததும் ஆடுகள் கத்த ஆரம்பித்தன. இதையடுத்து அய்யாவு மற்றும் கெப்புசாமி ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அவர்களை காட்டுயானை தாக்கி தூக்கி வீசியது. 2 ஆடுகளையும் யானை மிதித்து கொன்றது. பிறகு வனப்பகுதிக்குகள் யானை சென்றது.
இதற்கிடையே காட்டுயானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அய்யாவு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். கெப்புசாமி காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் அந்த வழியாக தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் அய்யாவு இறந்து கிடப்பதையும், கெப்புசாமி உயிருக்கு போராடியதையும் கண்டு தேவாரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிருக்கு போராடிய கெப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த அய்யாவுவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் மேலும் ஒருவர் யானை மிதித்து பலியானார். அவர் பெயர் தவசியப்பன் (வயது 75). ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். வனக்காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற அவருக்கு சொந்தமான எருமை மாடுகளில் ஒரு எருமை மாடு மட்டும் வரவில்லை. இதனால் அவர் அந்த மாட்டை தேடி வனப்பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால் நேற்று காலை தவசியப்பனை தேடி அவருடைய உறவினர்கள் வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு எருமை மாட்டை தேடி தவசியப்பன் வனப்பகுதிக்கு சென்றபோது, காட்டு யானை மிதித்ததில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இதுபற்றி ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story