ஆசிரியர்கள் வராததை கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கோத்தகிரி அருகே ஆசிரியர்கள் வராததை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர் கிராமத்தில் 10-ம் வகுப்பு வரை செயல்படும் அரசு உண்டு உறைவிட உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் குழந்தைகள் சுமார் 80 பேர் பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியராக ஒருவரும், 2 ஆசிரியர்கள், 3 ஆசிரியைகள் மற்றும் 2 சமையலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியாகியும் பள்ளிக்கு சமையலர்கள் வராததால் விடுதியில் தங்கி உள்ள பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்ததுடன் பள்ளி வளாகத்தில் திரண்டனர். மேலும் இதுகுறித்து புகார் தெரிவிக்க பள்ளிக்கு சென்ற போது ஆசிரியர்களும் குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயரதிகாரிகள் வரும் வரை அங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த சமூகநல தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியர் சகாதேவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து நாளை முதல் (இன்று) குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புமாறும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story