பூதப்பாண்டி அருகே கனமழையால் சாலையில் மண் அரிப்பு பள்ளத்தில் பஸ்கள் சிக்கியதால் மாணவ- மாணவிகள் அவதி


பூதப்பாண்டி அருகே கனமழையால் சாலையில் மண் அரிப்பு பள்ளத்தில் பஸ்கள் சிக்கியதால் மாணவ- மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 9:01 PM GMT)

பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் பகுதியில் பலத்த மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ்கள் சிக்கியதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

கன்னியாகுமரி,

நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து புத்தன் அணையில் இருந்து குழாய்கள் மூலம் நாகர்கோவில் சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த வாரம் தடிக்காரன்கோணம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. அப்போது பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர், அந்த பள்ளங்கள் மூடப்பட்டன.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில் பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு தடிக்காரன்கோணம் -கீரிப்பாறை செல்லும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளமானது. இதனால் அதிகாலையில் இந்த வழியாக வந்த கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ஜீப் பள்ளத்தில் சிக்கியது. பின்னர், ஜீப் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 10.45 மணிக்கு தடிக்காரன்கோணம்- குலசேகரம் செல்லும் சாலையில் அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அரசு போக்குவரத்து கழக பணியாளர்களும் விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள், பஸ்பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதியடைந்தனர்.

தோவாளை வடக்கூர் மாடன்தம்புரான் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள்(வயது 70). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வசிக்கும் மாடி வீட்டின் கூரை, ஓடுகளால் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாகம்மாள் வீட்டின் கீழ் தளத்தில் தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, மாடியில் இருந்த அறை முழுவதும் இடிந்து விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோவாளை பகுதியில் விடிய- விடிய பெய்த மழைக்கு மாடியில் இருந்த அறை இடிந்து விழுந்தது தெரியவந்தது. நாகம்மாள் இரவு கீழ் தளத்தில் தூங்கியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்த தோவாளை கிராம நிர்வாக அதிகாரி சிவஞானம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

குளச்சல் கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் கட்டுமரங்களும் மீன் பிடித்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 1-ந் தேதி முதல் 60 நாட்களுக்கு குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.ஆனால் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று காலை முதல் குளச்சல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.கடலில் காற்றும் பலமாக வீசுகிறது. கடலும் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கட்டுமரங்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவை அனைத்தும் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டுமரங்கள் கடலுக்கு செல்லாததால் நேற்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தன.

கொல்லங்கோடு அருகே மீனவ கிராமமான நீரோடி காலனி பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் கடலின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நீரோடி காலனி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினர். ராட்சத அலைகளால் மணல் அரிப்பு ஏற்பட்டது. நீரோடி காலனி பகுதியில் கடற்கரையோரம் இருந்த பேருந்து நிறுத்தம், மீன் விற்பனை செய்யும் இடம் ஆகியவை கடல் சீற்றத்தால் சேதம் அடைந்துள்ளன. தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் கோலப்பன் விரைந்து வந்து பார்வையிட்டார். அவரிடம் நீரோடிகாலனி, வள்ளவிளை உள்ளிட்ட பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் நான்குவழிசாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது பெய்து வரும் மழையால் பாலத்தில் கிழக்கு பகுதியில் சாலையில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு சுற்றிலும் கற்களை வரிசையாக அடுக்கி வைத்தனர். தொடர்ந்து விரிசல் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாக தோண்டப்பட்டு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதற்கிடையே விரிசல் ஏற்பட்ட பகுதியை ஆஸ்டின் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story