நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது களக்காடு தலையணை நிரம்பியது
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கோடை காலம் முடிவடைந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ காற்று வீசத்தொடங்கியது. இந்த நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. அதையொட்டி அமைந்துள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்யத் தொடங்கியது.
இதே போல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 8.30 மணி வரை சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசாக மழை தூறியது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்று குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழ்நிலை நிலவியது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது, இந்த அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 130 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இது வினாடிக்கு 1,154 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 12.20 அடியில் இருந்து 20.40 அடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே நாளில் நீர்மட்டம் 8.20 அடி உயர்ந்தது. அணைக்கு உள்ளே இருக்கும் பாணதீர்த்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதேபோல் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 77 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 275 கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் குடிநீருக்காக தாமிரபரணி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இந்த மழையால் ராமநதி, கடனாநதி, கருப்பாநதி அணைகளுக்கும் வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட கடும் வறட்சியால் அங்குள்ள தலையணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தண்ணீர் இன்றி வறண்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று காலை முதல் தலையணைக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்ததால் அணை நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பாக குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தலையணை நிரம்பியதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை -23, ஆய்குடி -3, சேரன்மாதேவி -12, நாங்குநேரி -2, பாளையங்கோட்டை 3, ராதாபுரம் -17, சங்கரன்கோவில் -1, செங்கோட்டை -12, தென்காசி -7, நெல்லை -3.
அணை பகுதிகள்:- பாபநாசம் -15, சேர்வலாறு -4, மணிமுத்தாறு -7, ராமநதி -5, கருப்பாநதி -6, குண்டாறு -12, நம்பியாறு -15, கொடுமுடியாறு -20, அடவிநயினார் -10.
Related Tags :
Next Story